சாலொமோனின் உன்னதப்பாட்டு. [* முக்கிய ஆண் மற்றும் பெண் பேச்சாளர்கள் (தொடர்புடைய எபிரெய வடிவங்களின் பாலினத்தின் அடிப்படையில் முதன்மையாக அடையாளம் காணப்பட்டது) காதலன் மற்றும் காதலி என்ற முறையான தலைப்புகளால் குறிக்கப்படுகின்றன. மற்றவர்களின் வார்த்தைகள் தோழியர் என்று குறிக்கப்பட்டுள்ளன. சில நிகழ்வுகளில் பிரிவுகளும் அவைகளின் தலைப்புகளும் விவாதத்திற்குரியவை. ]
என்னை உம்முடன் கூட்டிச்செல்லும்; நாம் விரைவாய் போய்விடுவோம். அரசன் தமது அறைக்குள் என்னைக் கொண்டுவரட்டும். நாங்கள் உம்மில் மகிழ்ந்து களிப்படைகிறோம்; திராட்சை இரசத்தைப் பார்க்கிலும் உமது அன்பையே புகழ்வோம். அவர்கள் உம்மீது காதல்கொள்வது எவ்வளவு சரியானது!
நான் கருப்பாய் இருக்கிறேன் என்று பார்க்கவேண்டாம்; வெயில் பட்டதினாலே நான் கருப்பாய் இருக்கிறேன். என் சகோதரர்கள் என்மேல் கோபங்கொண்டு, திராட்சைத் தோட்டங்களைப் பராமரிக்க என்னை வைத்தார்கள்; அதினால் என் சொந்தத் திராட்சைத் தோட்டத்தை என்னால் கவனிக்க முடியாமல் போய்விட்டது.
பெண்களுள் பேரழகியே, அதை நீ அறியாவிட்டால், செம்மறியாட்டின் அடிச்சுவடுகளைப் பின்தொடர்ந்து போய், மேய்ப்பர்களின் கூடாரங்களுக்கு அருகில் உன் வெள்ளாட்டுக் குட்டிகளை மேயவிடு.